‘அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது’ - ஐகோர்ட்டு தீர்ப்பு

டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த தீர்ப்பு சரியானது இல்லை என 3 ஐகோர்ட்டு நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.
‘அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது’ - ஐகோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை,

அரசு ஊழியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என்று ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்சும், ராஜினாமா செய்தால், சட்டப்படி ஓய்வூதிய வழங்கத் தேவையில்லை என்று மற்றொரு டிவிசன் பெஞ்சும் மாறுபட்ட இரு வேறு தீர்ப்புகளை பிறப்பித்தன.

இதனால், தனி நீதிபதி முன்பு இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இருவிதமான இந்த தீர்ப்புகளில், எது சரியானது என்று முடிவு செய்ய ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரதசக்கரவர்த்தி, சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட முழு பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

நீதிபதிகள் இந்த வழக்குகளை விசாரித்தனர். அரசு தரப்பில் அரசு வக்கீல் கே.எச்.ரவிக்குமார், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் தரப்பில் ஆர்.சிவக்குமார், மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் எஸ்.நாகஷீலா, கிருஷ்ணா ரவீந்திரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, ‘‘மருத்துவ ஆய்வுக்கு உட்பட்டு, முறையான அரசு ஒப்புதலுடன், மருத்துவ காரணத்துக்காக, அதாவது உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதேபோல, அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட ஆண்டுகள் பணிபுரிந்து ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஆனால், மருத்துவ ஆய்வுக்கு உட்படாமல், உடல் நலம் காரணமாகவும், சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்பவர்களுக்கும் இந்த ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்கள் வழங்க முடியுமா? என்று இருதரப்பிலும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அரசு பணிகள் விதிகள் மற்றும் சட்டத்தின்படி, அரசு பணியை ராஜினாமா செய்தால், அவர்கள் ஓய்வூதிய உள்ளிட்ட பண பலன்களை பெற தகுதியில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த தீர்ப்பு சரியானது இல்லை. அதனால், ராஜினாமா செய்வோருக்கு ஓய்வூதியம் வழங்கமுடியாது'' என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com