புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது

க.எறையூர் மலை பகுதிகளில் புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று அக்கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது
Published on

கல் குவாரி

பெரம்பலூர் அருகே க.எறையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட க.எறையூர் கிராமத்திற்கு அருகே உள்ள மலை பகுதிகளில் அதிகமாக கல் குவாரிகள் உள்ளது. இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நீர் மற்றும் காற்று மிகவும் மாசு அடைந்துள்ளது. எனவே இக்கால மற்றும் எதிர்கால தலைமுறையின் நலன் கருதி இந்த மலை பகுதிகளில் புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது. கல் குவாரிகளில் இருந்து அதிக வேகத்தில் செல்லும் லாரிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படுகிறது. ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நடவடிக்கை...

மேலும் கற்கள், மண் அள்ளி செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது சாலையின் இருபுறமும் கற்கள், மண் கீழே விழுவதால் சாலைகள் பழுதாகி உள்ளது. அதை முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் க.எறையூர் மகாத்மா காந்தி நகர் அருகே சுமார் 10-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகிறது. இவை அனைத்துமே அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறதா? என தெரியவில்லை. ஏன்னெனில் இந்த கிரஷர்கள் அதிக புழுதியை வெளியிடுகின்றன.

இதனால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கல்குவாரிகள், கிரஷர்களை சுரங்க துறை அதிகாரிகள் கண்காணித்து அரசின் விதிமுறைகளை மீறுவோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்தி வாய்ந்த வெடிகளை வெடிக்க செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com