

மதுரை,
லஞ்சம் கோருவது அரசு அதிகாரிகளின் அலுவல் பணிகளுடன் தொடர்புடைய குற்றச்செயல் அல்ல என்பதால், லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், சீமானூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்-அமைச்சரின் சிறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஆன்லைன் மூலம் டெண்டர் கோரப்பட்டதாகவும், அதில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல், போலி ஆவணங்களை சமர்ப்பித்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பார்த்திபன், கணக்கு அலுவலர் ராமலிங்கம், உதவி திட்ட அலுவலர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் சுசீலா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து கணேசன் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் முன் அனுமதி கோரப்பட்டதாகவும், ஆனால் தமிழக அரசு கடந்த 25.9.2026 அன்று அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போலி ஆவணங்களின் அடிப்படையில் டெண்டர் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், எந்தவித விசாரணையும் நடத்தாமல் அரசு முன் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஒரு பொது ஊழியருக்கு எதிராக விசாரணை அல்லது புலனாய்வு மேற்கொள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-ஏ-ன் கீழ் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். பொது ஊழியர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தச் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே முன் அனுமதி பாதுகாப்பு வழங்கப்படும். அனைத்து வழக்குகளுக்கும் இந்தச் சட்டப்பிரிவைப் பொருத்திப் பார்க்க முடியாது.
ஒரு பொது ஊழியர் தனது அலுவல் பணிகள் அல்லது கடமைகளை நிறைவேற்றும்போது எடுத்த முடிவு அல்லது செய்த பரிந்துரை தொடர்பாகவே இந்த முன் அனுமதி விதிமுறை பொருந்தும்.
ஆனால், இந்த வழக்கில் அதிகாரிகள் மீது சட்டவிரோதமான பணப் பலன் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லஞ்சம் கோருவது அவர்களின் அலுவல் பணிகள் அல்லது கடமைகளுடன் தொடர்புடையது அல்ல. எனவே, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-ஏ (1)-ன் கீழ் அரசின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முன் அனுமதி வழங்க மறுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது அரசின் முன் அனுமதி பெறாமலேயே ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை இயக்குனர் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
முதற்கட்ட விசாரணையை முடித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.