செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை: வருமான வரித்துறை அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கியுள்ளனர் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை: வருமான வரித்துறை அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பதவி வகித்து வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மணிமங்கலத்தில் உள்ள அவரது வீடு மற்றும் கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.

"வீட்டில் சோதனை என்ற பெயரில் என்னை வருமான வரித்துறையினர் சிறைப்பிடித்துள்ளனர்" என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் ஹிந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு 'சோதனை என்ற பெயரில், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

எனது அரசியல் கடமைகளை செய்ய விடாமல் சோதனை என்ற பெயரில் சிறைபிடித்து வைத்துள்ளனர். மத்திய அமைப்புகளை அரசியல் அழுத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார். செல்வப்பெருந்தகை வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது போல் அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை என்றும் ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாக செல்வப்பெருந்தகை கூறுவதும் உண்மையில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com