

சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவின் போது சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் தலைமைக் காவலர் ஒருவர் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்த இடங்களில் வாக்குப்பதிவு முறையாக நடைபெற்றதா என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
சென்னை ஹார்பர் தொகுதியில் திமுக மற்றும் தவெக (TVK) வேட்பாளர்களுக்கு இடையே ‘பூத் ரிக்கிங்’ (Booth Rigging) எனப்படும் வாக்குப்பதிவு முறைகேடு தொடர்பாக மோதல் வெடித்தது. இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பதிவான வீடியோ ஆதாரங்களை (CCTV) தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நீண்ட நேரம் தடையானது. பின்னர் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பழுதடைந்த காகித மாதிரி எந்திரம் ஒன்று இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதால், அங்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படவில்லை. எனவே தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போல மேற்கு வங்க தேர்தலிலும் முதற்கட்ட வாக்குப்பதிவின் 44,376 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.