கூட்டணி முறிவு குறித்து எந்த அறிக்கையும் என்னிடம் கேட்கவில்லை -அண்ணாமலை பேட்டி

கூட்டணி முறிவு குறித்து பா.ஜனதா தலைமை எந்த அறிக்கையும் என்னிடம் கேட்கவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
கூட்டணி முறிவு குறித்து எந்த அறிக்கையும் என்னிடம் கேட்கவில்லை -அண்ணாமலை பேட்டி
Published on

கோவை,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு தூய்மைக்கு முன்னுரிமை அளித்து வருவதால், தமிழக அரசு போட்டி போடாமல், இந்தியாவின் திட்டமாக அதனை நினைத்து அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தி.மு.க. பொய் பேசுவதற்கு சமூகவலைதளங்களை பயன்படுத்துகிறது.

அறிக்கை கேட்கவில்லை

கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த அறிக்கையும் கட்சி மேலிடம் கேட்கவில்லை, இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல.

ஒரு பையுடன் மட்டுமே டெல்லி போகிறேன். டெல்லி சென்றாலும் இப்படியேதான், போகாவிட்டாலும் இப்படித்தான் இருப்பேன். நான் நேர்மையாக இருக்கின்றேன். நடைபயணம் குறித்தும், நடை பயணத்தில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காகவே டெல்லி செல்கிறேன். அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைந்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு எதுவும் ஏற்படாது. நான் தினமும் மக்களை சந்திக்கிறேன். 57 சதவீத வாக்காளர்கள் 35 வயதுக்கு உட்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்கின்றனர். இளைஞர்கள் வேறு உலகத்தில் வாழ்கின்றனர். அவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காகத்தான் முயற்சிக்கிறேன்.

வெங்காயம் போன்றது

மாநிலத்தலைவர் பதவி வெங்காயம் போன்றது, அரசியலில் பதவிக்காக வந்தவன் நான் கிடையாது. எனக்கு என தனி உலகம் இருக்கின்றது, அதில் வாழ்கின்றேன். அனுசரித்து செல்லும் போக்கு என்னிடம் கிடையாது. நான் யாருக்காகவும் மாற முடியாது. தி.மு.க. புகழ்பாடவே கம்யூனிஸ்டு கட்சி இருக்கின்றது. இவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரியாக இருக்கின்றனர்.

ஒரே ஒரு தேர்தலில் பா.ஜ.க.விற்கு 25 சதவீத வாக்கு கிடைத்தால் அதன் மூலம், தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாறிவிடும். இந்தியாவில் பா.ஜ.க. மட்டும் தான் சுத்தமான கட்சியாக இருக்கின்றது. என்னை எல்லாரும் எதிர்க்கிறார்கள். அதுதான் என் வளர்ச்சிக்கு காரணம். இதை நான் மாற்றி கொள்ள விரும்பவில்லை. கூட்டணி குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம்

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, மாநில பாரதீய ஜனதா தலைவர் பதவியில் இருந்து உங்களை மாற்றினால், பாரதீய ஜனதாவில் நீடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு ஆவேசம் அடைந்த அண்ணாமலை, லட்சுமண் ரேகை எல்லைக்கோடு போல் நிருபர்கள் நிற்க வேண்டும். விரும்பிய எல்லாவற்றையும் கேள்வியாக கேட்க கூடாது என்று கூறினார்.

தூய்மை பணி

முன்னதாக நேற்று காலை கோவை அருகே உள்ள எஸ்.எஸ்.குளம் ஊராட்சியில் உள்ள குளக்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. அண்ணாமலை கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்க்க வேண்டும் என்பதே எனது முக்கிய பணி. அரசியல் பணியில்லாவிட்டால் விவசாயம் செய்வேன். தற்போது தூய்மை அரசியலுக்கான விதையை விதைத்துள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com