

சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் த.வெ.க. 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார்.
அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும். 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம்.
எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்று சூழல் நிலவியது. த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 ஆண்டுகள் வலுவான ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறுகையில், “ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்பட கட்சியின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக வெளியான தகவல் தவறு. ஆதவ் அர்ஜுனா நிறுவனத்திற்கு சொந்தமான காரில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றவர்கள் தவெக நிர்வாகிகள் இல்லை” என்று கூறினார்.