லஞ்ச ஒழிப்பு துறை தன்னாட்சி அமைப்பு; யாரும் தலையிட முடியாது: பொன்னையன் பேட்டி

லஞ்ச ஒழிப்பு துறை என்பது தன்னாட்சி அமைப்பு என்றும் இதில் யாரும் தலையிட முடியாது என்றும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை தன்னாட்சி அமைப்பு; யாரும் தலையிட முடியாது: பொன்னையன் பேட்டி
Published on

சென்னை,

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நெடுஞ்சாலை டெண்டர் புகார் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொன்னையன் நேற்று பேசும்பொழுது, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என கூறினார்.

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்பு துறை இயங்குவது வெட்கக்கேடானது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொன்னையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்பொழுது, தி.மு.க. ஆட்சியிலேயே பெட்டி டெண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் டெண்டர் முறை அமல்படுத்தப்பட்டது.

உலக வங்கி விதிகளின்படி டெண்டர் யாருக்கு என முடிவு செய்யப்படுகிறது. ஆர்.டி.ஜி.எஸ். முறையில் குறிப்பிடப்படும் தொகையை முன்கூட்டி அறிவது என்பது இயலாத விசயம் என கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்பொழுது, முதல் அமைச்சர் பழனிசாமியின் நிர்வாக அணுகுமுறை பாராட்டுதலை பெற்று தந்துள்ளது. அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்யும் என கூறவில்லை.

சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்யலாம் என்றே கூறினேன். மேல்முறையீடு செய்யலாம் என்றால் செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். லஞ்ச ஒழிப்பு துறையானது அ.தி.மு.க.வுக்கோ, முதல் அமைச்சருக்கோ கட்டுப்பட்டதல்ல.

லஞ்ச ஒழிப்பு துறை என்பது தன்னாட்சி அமைப்பு. இந்த துறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி செயல்படுகிறது. இதில் யாரும் தலையிட முடியாது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com