

திருவள்ளூர் அடுத்த கல்லம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 50). இவர் சென்னையை சேர்ந்த பைனான்சியர் பாரஸ் என்பவரிடம் இருந்து தவணை முறையில் சுற்றுலா வாகனத்தை வாங்கி உள்ளார். கடந்த 27-ந் தேதி இரவு தர்மன் மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் அருகே வாகனத்தை ஓட்டி கொண்டு வந்துள்ளார்.
அப்போது வெள்ளவேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் உள்பட 7 பேர் அந்த வாகனத்தை நிறுத்தி பைனான்சியர் பாரஸ் வண்டியை வாங்கி வரச் சொன்னதாக கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது கார்த்திக்குடன் வந்த மற்றொரு நபர் தர்மன் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்து 500-ஐ எடுத்துக் கொண்டு உருட்டுக்கட்டையால் அவரை அடித்து உதைத்து உள்ளார். இந்த தாக்குதலில் தர்மன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் 7 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தர்மனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த தாக்குதல் குறித்து மப்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பைனான்சியர் பாரஸ், வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.