தி.மு.க. முன்னாள் எம்.பி. உதவியாளர் கடத்தி படுகொலை; உடல் புதைப்பு - திடுக்கிடும் தகவல்


தி.மு.க. முன்னாள் எம்.பி. உதவியாளர் கடத்தி படுகொலை; உடல் புதைப்பு - திடுக்கிடும் தகவல்
x

தி.மு.க. முன்னாள் எம்.பி. உதவியாளர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை செஞ்சி அருகே புதைத்துள்ளனர்.

சென்னை

வடசென்னை தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமி. இவர் கடந்த 2013ம் ஆண்டு காலமானார். குப்புசாமியின் உதவியாளராக பணியாற்றியவர் குமார். 72 வயதான குமார் கடந்த 16ம் தேதி தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், தாம்பரம் பஸ் நிலையத்தில் சென்ற குமார் மாயமானார்.

பல இடங்களில் தேடியும் குமாரை கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் சேலையூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கும், குமாருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரவியை பிடித்து போலீசார் விசாரித்ததில், நிலப்பிரச்சினையில் குமாரை கடத்தி கொலை செய்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே புதைத்துவிட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ரவி மற்றும் அவரது கூட்டாளிகளான பூந்தமல்லியை சேர்ந்த விஜய், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

குமார் கொலை தொடர்பாக விசாரணையில் வெளியான தகவல்;

குமாரின் உறவினர் ஒருவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் அருகே முத்தண்டியில் ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குமார் பாதுகாத்து வந்தார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது.

இந்த நிலத்தை ரவி தனது கள்ளக்காதலியான தனலெட்சுமி பெயரில் போலியாக பதிவு செய்துள்ளார். குமாரின் உறவுக்கார பெண்ணான மகாலெட்சுமி பெயரில் ஒரிஜினல் நில பத்திரம் உள்ளது.

இந்த நிலத்தை அபகரிக்க மகாலெட்சுமி என்ற பெயரில் போலியாக வெறு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்த ரவி தனது கள்ளக்காதலி தனலெட்சுமிக்கு நிலத்தை விற்பனை செய்ததுபோல் போலியாக பத்திரபதிவு செய்துள்ளார்.

மேலும், இந்த போலி பத்திர பதிவையடுத்து நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை கைப்பற்றும் நோக்கில் ரவி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குமாரை தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து காரில் கடத்தியுள்ளார்.

பின்னர், நிலத்தின் ஒரிஜினல் ஆவணங்களை தரும்படி குமாரிடம் காரில் வைத்து ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் கடுமையாக தாக்கினர்.

குமாரை சித்ரவதை செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், குமாரின் உடலை காரிலேயே விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு குமாரின் உடலை புதைத்த கும்பல் சென்னை திரும்பியுள்ளது. பின்னர், எதுவும் நடக்காததுபோல் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நில பிரச்சினையில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story