

வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) கீதாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் வாங்கியதற்கு ரூ.16 லட்சத்து 86 ஆயிரம் நிதி ஒதுக்கீடு, ஊராட்சி ஒன்றிய பள்ளி சத்துணவு மையங்களில் பெயர் பலகை வைப்பதற்காக ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வேல்வார்கோட்டை மற்றும் பாகாநத்தம் ஊராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊதியம் வழங்குவதுபோல் ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என்று கவுன்சிலர் சுப்பிரமணி காரிக்கை விடுத்தார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டம் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஏழுமலையான் நன்றி கூறினார்.