வடகிழக்கு பருவமழை: அனைத்து துறைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ககன்தீப் சிங் பேடி பேட்டி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களைக் கண்காணிக்க அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ககன்தீப் சிங் பேடி
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ககன்தீப் சிங் பேடி இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பருவமழை முன்னெச்சரிக்கை

இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் , அம்பத்தூர், மணலி, தண்டையார்பேட்டை மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைத்தல், கணேசபுரத்தில் மேம்பாலப் பணிகள் உள்ளிட்ட பணிகளையும், நேப்பியர் பாலம் பகுதியில் உள்ள கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரப் பகுதியில் மணல் திட்டுகள் அகற்றும் பணிகள், கூவம் ஆற்றில் கரையில் முன்மாதிரி பணியாக கரைகளை மேம்படுத்துதல், செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல், பொதுமக்களுக்கான நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு-143, முகப்பேர் சாலையில் கூக்சன் சாலை முதல் கூவம் ஆறு வரை நீர்வளத்துறையின் சார்பில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் 5.10 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டார். இத்திட்டத்தில், இதுவரை 3.15 கி.மீ. பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்தி, வருகின்ற அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவு செய்திடவும், இப்பணிகள் நிறைவடையும் வரை, கனமழையை சமாளிக்கவும், நீர்த்தேக்கம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கவும் தேவையான நீரகற்றும் நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அம்பத்தூர் மண்டலத்தில் கொரட்டூர் சந்திப்பில், வடக்கு அவென்யூ உபரிநீர் சென்று சேரும், கிழக்கு அவென்யூ பகுதி முதல் ஓட்டேரி நல்லா வரையில் மாநகராட்சியின் சார்பில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் 2.5 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் தற்போது 2 கி.மீ. பணிகள் நிறைவடைந்துள்ளன. நடைபெற்று வரும் பணிளை 15.10.2026க்குள் முடித்திடவும், அருகிலுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்குமாறும், வடிகால் பணிகள் நிறைவடைந்தவுடன் சாலை சீரமைப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், மாதவரம் மண்டலம், வார்டு-23, மாதவரம் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் மாநகராட்சியின் சார்பில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் 1.16 கி.மீ. நீளத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுவரை 1.03 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்திடவும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதிக்கு முன்னதாக சாலை சீரமைப்புப் பணிகளை முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை மண்டலம், கணேசபுரத்தில் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் 678 மீ. நீளம் மற்றும் 15.20 மீ. அகலத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளையும், கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை சேகரித்து வெளியேற்றிடும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 2 நீர் சேகரிப்பு கிணறு அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ச்சியாக, தேனாம்பேட்டை மண்டலம், நேப்பியர் பாலம் பகுதியில் உள்ள கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரப் பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் ட்ரெட்ஜர் இயந்திரம் (Dredger) மூலம் மணல் திட்டுகள் அகற்றும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சென்னை நதிகளை புனரமைத்து அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், நேப்பியர் பாலம், கூவம் ஆற்றில் வலது கரையில் முன்மாதிரிப் பணியாக கரைகளை மேம்படுத்துதல், செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல், பொதுமக்களுக்கான நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாநிலத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர், அமைச்சர் பெருமக்களும் பங்கேற்ற கூட்டங்களில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகள்

நிலுவையில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதோடு, ஏற்கனவே உள்ள வடிகால்களில் படிந்துள்ள வண்டல் மண் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடிகால்களுக்குள் நீர் தடையின்றி செல்ல வண்டல் சேகரிப்புத் தொட்டிகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் வண்டல் சேகரிப்புத் தொட்டிகள் தூர்வாரப்பட்டு, தற்போது இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆற்று முகத்துவாரங்கள் மற்றும் கால்வாய்கள் பராமரிப்பு

ஆற்று நீர் கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் வண்டல் அடைப்பதைத் தடுக்க நீர்வளத்துறை சார்பில் ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூவம் ஆற்று முகத்துவாரத்தில் சிறப்பு டிரெட்ஜிங் (Dredging) இயந்திரங்கள் மூலமாகவும், அடையாறு, முத்துக் காடு மற்றும் வடசென்னை பகுதிகளில் எர்த் மூவிங் இயந்திரங்கள் மூலமாகவும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் வரை தொடர்ந்து நடைபெறும்.

பக்கிங்ஹாம் கால்வாயில் 18 இடங்களிலும், கூவம் ஆற்றில் 14 இடங்களிலும் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், சென்னை மாநகராட்சியின் விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், டி.வி.எஸ். கால்வாய் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற பிற மாநகராட்சிகளிலும் உள்ள உள் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள்

வரும் 29-ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் இரண்டு முறை உயர்நிலை ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களைக் கண்காணிக்க அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முழுமையான தடுப்புகள் (Barricades) அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் 20 முதல் 30 இடங்களில் தற்காலிக வடிகால்கள் மற்றும் நீர் இறைக்கும் பம்புகள் அமைக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விடங்களில் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மெட்ரோ நிர்வாகம் கொண்ட கூட்டுத் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எல்-நினோ தாக்கத்தால் அதிக மழை பொழிய வாய்ப்புள்ளதால், அரசு அமைத்துள்ள ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com