வடகிழக்கு பருவமழை: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழையால் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு
Published on

சென்னை:

வடகிழக்கு பருவமழை எதிரொலியால் கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் 32 மாவட்டங்களில் அதிகரித்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2018ல் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. குறிப்பாக, மாநிலத்தில் 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிக அதிக அளவில் குறைந்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால், அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.

இவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகம் முழுவதும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உட்பட 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 3.08 மீட்டர், சேலத்தில் 5.42 மீட்டர், அரியலூர் 3.55 மீட்டர், பெரம்பலூர் 3.85 மீட்டர், திருச்சி 2.73 மீட்டர், விழுப்புரத்தில் 2.23 மீட்டர், திருவண்ணாமலை 2.79 மீட்டர், காஞ்சிபுரத்தில் 2.01 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்த முறை வடகிழக்கு பருவமழையால் அனைத்து மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com