பெருங்குடி, சோழிங்கநல்லூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சர் விக்னேஷ் நேரில் ஆய்வு

சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் மடுவு பாலப் பகுதியில் உள்ள கால்வாயில் நீர் சீராக செல்வதை அமைச்சர் விக்னேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருங்குடி, சோழிங்கநல்லூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சர் விக்னேஷ் நேரில் ஆய்வு
அமைச்சர் விக்னேஷ்
Published on: 

சென்னை,

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;-

ஆய்வு

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பக்கிங்ஹாம் கால்வாய்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், பெருங்குடி மண்டலம், வார்டு-183க்குட்பட்ட மாயன் பாலத்தின் கீழுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பின்னர், வார்டு-182க்குட்பட்ட எஸ்டேட் 3ஆவது தெருவில் மழைநீர் வெளியேறும் சிறு துளைகளில் நீர் செல்வதை பார்வையிட்டு உடனுக்குடன் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ச்சியாக, கெனால்புரம், அம்பேத்கர் நகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரேடியல் சாலை

தொடர்ந்து, வார்டு-189க்குட்பட்ட ரேடியல் சாலையில் உள்ள குறுக்குக் கால்வாயில் நீர் வெளியேறும் இடத்தில் உள்ள சென்னைக் குடிநீர் வாரியத்தின் சார்பில் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பெருங்குடி

பின்னர், பெருங்குடி மண்டலம், வார்டு-187ல் வீரங்கல் ஓடையிலிருந்து உபரி நீரைப் பாலாஜி நகருக்கு அனுப்பும் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளையும், கொட்டிவாக்கம் இளங்கோ நகர் கால்வாயில் நீர் சீராக செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சோழிங்கநல்லூர்

தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் மடுவு பாலப் பகுதியில் உள்ள கால்வாயில் நீர் சீராக செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மகேஷ்வரி ரவிக்குமார், (பெருங்குடி), தெ.பாஸ்கர பாண்டியன், (சோழிங்கநல்லூர்), தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com