வடகிழக்கு பருவ மழை: நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்கிட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவ மழை: நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்கிட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக 2024 ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் அனைத்தும் அழுகிப்போயுள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே, காவிரியிலிருந்து தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்காத காரணத்தினால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. செப்டம்பர் மாதமும் காவிரியிலிருந்து உரிய தண்ணீர் கிடைக்காததால் குறைந்த அளவிலேயே சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்றன. ஆனால், அதிலும் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துபோயுள்ளன. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ஏக்கர் வரையிலான தாளடி பயிர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

நாகை மாவட்டத்தில் 3,000 ஏக்கரில் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சையில் ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், திருவையாறு பகுதிகளில் 10,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளன. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை தாலுக்காகளில் மணிலா 1,000 ஏக்கர், எள் 800 ஏக்கர், உளுந்து 200 ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் 30,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி பகுதிகளில் 12,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும், மணிலாவும் பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுங்குன்றம் ஆகிய பகுதிகளில் 10,000 ஏக்கர் நெற்பயிர்களும், 2,000 ஏக்கர் மணிலா பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் நெற்பயிர்களும், மணிலாவும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், கடன் வாங்கி பயிர்செய்த விவசாயிகள் செய்வதறியாது கலங்கிபோய் வேதனையில் நிற்கின்றனர்.

மிக்ஜம் புயல்-கனமழை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். தமிழக அரசின் சார்பில் மறு சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடி நிதி கோரியது. மத்திய அமைச்சர்களும், மத்திய குழுவினரும் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்த பிறகும் மத்திய பாஜக அரசு இதுவரை தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கிடவில்லை. இருப்பினும் தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000/- இழப்பீடு வழங்கிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com