

சென்னை,
இன்று தலைமை செயலாளர் மு. சாய்குமார், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இன்று தலைமை செயலாளர் மு. சாய்குமார், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றிடும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தலைமைச் செயலாளர், அடையாறு மண்டலத்தில் ஐ.ஐ.டி. பகுதியிலிருந்து வெளிவரும் மழைநீரை பக்கிங்ஹாம் கால்வாயில் செலுத்தும் வகையில் டைடல் பார்க் பகுதியில் ரூ.13.52 கோடி மதிப்பீட்டில் 660 மீ. நீளத்தில் 3 மீ. x 3 மீ. அளவில் இரண்டு நீர்வழிப்பாதைகளாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர், 1ஆவது பிளாக் கால்வாயில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 235 மீ. நீளம் மற்றும் 13 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகள், 4ஆவது பிளாக் பகுதி கால்வாயில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் 207 மீ. நீளம் மற்றும் 14.40 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிலுவையில் உள்ள 110 மீ. நீளத்திலான பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கால்வாயில் வெளியேறும் மழைநீரானது வேளச்சேரி, மேடவாக்கம் சாலைப் பகுதியில் உள்ள கால்வாயின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடையும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள ராம் நகர் (தெற்கு), குபேரன் நகர், சதாசிவம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்த் தேக்கமின்றி இக்கால்வாயின் வழியாக வெளியேறும்.
பின்னர், வார்டு-189க்குட்பட்ட நாராயணபுரம் ஏரியில் நீர்வளத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியினையும், தண்ணீர் வெளியேற்றும் மதகு மற்றும் கால்வாயின் கட்டமைப்பினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ச்சியாக, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பை கிடங்கு வரையிலான நெடுஞ்சாலைதுறையின் சாலை பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீர் எளிதில் வெளியேறும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மற்றும் இந்த சாலையில் உள்ள 17 கல்வெர்ட்டுகளின் வழியே மழைநீர் தங்குதடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-193க்குட்பட்ட துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பணிகள் நடைபெறும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் நீரை பக்கிங்ஹாம் கால்வாயுடன் சேர்ப்பதற்காக ரூபாய் 73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு, இப்பணியினை தொடர்ந்து மேற்கொண்டு, பக்கிங்ஹாம் கால்வாயில் இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் மடுவு கால்வாயில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் தங்குதடையின்றி இந்த கால்வாயில் வெளியேறும் வகையில் பணிகளை விரைந்து முடித்திடவும், ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய சேவை துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் எம். வட்னேரே, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மகேஸ்வரி ரவிக்குமார், (பெருங்குடி), டி. பாஸ்கர பாண்டியன், (சோழிங்கநல்லூர்), இணை ஆணையாளர் (பணிகள்) செ. சரவணன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.