போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் - திருவள்ளூரில் பரபரப்பு


போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் - திருவள்ளூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Sept 2025 12:29 PM IST (Updated: 2 Sept 2025 2:38 PM IST)
t-max-icont-min-icon

பேச்சுவார்த்தை நடத்தியபோது வடமாநில தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்றிரவு அங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து அமரேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற காட்டூர் போலீசார் அமரேஷின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 1,000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது வட மாநில தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

வடமாநில தொழிலாளர்களின் தாக்குதலை கண்ட போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை வைத்து தங்களை தற்காத்து கொண்டனர். ஒருகட்டத்தில் போராட்டம் கைமீறி போனதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை விரட்டியடித்தனர்.

குடியிருப்பு பகுதிக்குள் செல்ல மறுத்த வடமாநில தொழிலாளர்கள் கூச்சல் எழுப்பி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story