பீகார் செல்லும் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த வடமாநில தொழிலாளர்கள்

பீகார் செல்லும் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து வடமாநில தொழிலாளர்கள் 200 பேர் பயணம் செய்தனர். அவர்களை சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் இறக்கி விட்டனர்.
பீகார் செல்லும் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த வடமாநில தொழிலாளர்கள்
Published on

வட மாநில தொழிலாளர்கள்

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு ரெயில்கள் மூலம் படையெடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பரோனிக்கு சென்ற ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை 6.16 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

ரெயில் சேலத்தில் இருந்து புறப்பட்டபோது எஸ்-4 என்ற முன்பதிவு பெட்டியில் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதையடுத்து அந்த பெட்டிக்கு டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சென்று பயணிகளிடம் விசாரித்தனர்.

200 பேரை கீழே இறக்கினர்

அப்போது அந்த பெட்டியில் முன்பதிவு டிக்கெட் எடுக்காத வடமாநில தொழிலாளர்கள் பலர் இருந்தது தெரியவந்தது. இதனால் முறையாக முன்பதிவு செய்த பயணிகள் உட்கார்வதற்கு இடமில்லாமல், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெட்டியில் முன்பதிவு செய்யாமல் பயணித்த வடமாநில தொழிலாளர்கள் இறக்கி விடப்பட்டனர். இதேபோல் மற்ற முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்திருந்த 200-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களும் அதில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பயணிகள் ரெயிலில்...

முன்பதிவில்லா பெட்டியில் இடம் இல்லாததால் முன்பதிவு செய்த பெட்டிகளை வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்து பயணம் செய்து வந்ததாக அவர்கள் கூறினர். இதனிடையே ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு சென்ற பயணிகள் ரெயில் சேலத்திற்கு வந்தது. அந்த ரெயிலில் வடமாநில தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் எர்ணாகுளம்-பரோனி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 6.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் சேலம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறி வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்து பயணம் செய்கிறார்களா? என சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com