

சென்னை,
முழுக்க முழுக்க வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மின் தடை குறித்த செய்தி வராத நாளே இல்லை. அரசு கூட்டங்கள், தலைமை செயலகத்தில் மின்வெட்டு ஏற்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் தொடங்கி தலைமைச்செயலகம் வரை மின்வெட்டு நீண்டுள்ளது.
மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தனது துறையை தவிர்த்து மற்ற துறைகளுக்கு பதில் அளிப்பார். வெறும் ரீல்ஸை மட்டுமே முன்வைத்து ஆட்சிக்கு வந்த டம்மி முதல்-அமைச்சர், மக்கள் இன்னல்களை பற்றி கவலைப்படவில்லை.
மின்வெட்டுக்கு ப்பியூஸ் கேரியர் திருட்டு என்றார்கள், பின்பு பஞ்சாப் சென்று பாருங்கள் என்றார்கள். தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மின்வெட்டு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக ஆட்சியின்போது எந்தவித தடையும் இன்றி சீராக மின்விநியோகம் செய்யப்பட்டது. தவெக ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களாகியும் மின்வெட்டை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரம் கொள்முதல் செய்ய நவம்பர், டிசம்பரிலேயே ஏற்பாடு செய்து டெண்டர் விடுவோம்.
திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்துக்கொண்டே வந்தது. 5 ஆண்டுகளில் 4,349 மெகாவாட் மின்சார தேவை அதிகரித்தது. 8,600 மில்லியன் யூனிட் அளவுக்கு உபரியாக இருந்ததை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்தோம். மின்மாற்றிகள் குறைந்த அளவில் பழுதாககூடிய நமது மாநிலத்தில் எப்படி மின்வெட்டு ஏற்படுகிறது.
திமுக ஆட்சியின்போது டான் ஜெட் கோவின் மின் உற்பத்தி 13,000 மெகாவாட் வரை அதிகரிக்கப்பட்டது.ஆந்திராவில் மின்சாரம் கொள்முதல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அதற்குள் நான் செல்லவில்லை.
தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்திய குறைத்து வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார். வெளிச்சந்தையில் யூனிட்டிற்கு ரூ35-க்கு கொள்முதல் செய்வது, மின்துறையின் ஒட்டுமொத்த நிதிநிலையை சீரழித்துவிடும் . திமுக ஆட்சியில் ரூ.20க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததை விமர்சித்த தவெக ரூ.35க்கு கொள்முதல் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.