விஜய் மீது நடவடிக்கை எடுக்க பயம் இல்லை: அமைச்சர் முத்துசாமி

மக்கள் உண்மைகளை முழுமையாக அறிந்து கொள்வார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் துயர சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் அரசியல் லாபத்துக்காக தமிழக அரசை குறை கூறி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக முழு பிரச்சினைகளையும் அரசு வீடியோக்கள் மூலம் விளக்கி உள்ளது. எனவே மக்கள் உண்மைகளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். தமிழ்நாடு அரசின் விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கி உள்ளது.
கோர்ட்டும் பல்வேறு வழிமுறைகளை வழங்கி உள்ளது. எனவே விசாரணையின் அடிப்படையில் போலீஸ் துறை நடவடிக்கை எடுக்கும். விஜய் மீது நடவடிக்கை எடுக்க பயம் இல்லை. கரூர் சம்பவத்துக்கு காரணம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் துயர சம்பவம் குறித்து அறிந்ததும் நள்ளிரவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்கினார்.
சிறுநீரகம் திருட்டு விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை முடிந்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






