வழக்கு விவரங்களை தெரிவிக்காத போலீசார் மீது நடவடிக்கை - ஐகோர்ட்டு எச்சரிக்கை

குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
வழக்கு விவரங்களை தெரிவிக்காத போலீசார் மீது நடவடிக்கை - ஐகோர்ட்டு எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் குற்ற வழக்குகளில், போலீஸ் தரப்பின் விளக்கத்தை கேட்பது உண்டு. சில வழக்குகளில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்படும். இதுபோன்ற நிலைகளில் குற்றவியல் வக்கீல்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்கும்போது, உரிய தகவல் அளிக்கப்படுவது இல்லை. விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகுவதும் இல்லை என்ற குற்றச்சாட்டு அண்மை காலங்களில் அதிகரித்து வருகிறது.

போலீஸ் அதிகாரிகள் வழக்கு தொடர்பான விவரங்களை முறையாக தெரிவிக்காததால், நீதிபதிகள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அரசு வக்கீல்கள் திணறுவது வழக்கமான ஒன்று. ஐகோர்ட்டுக்கு மிக அருகில் உள்ள யானைகவுனி போலீஸ் நிலைய அதிகாரி கூட ஒரு வழக்கில் பல நாட்களாக ஆஜராகவில்லை. இது தொடர்பாக ஐகோர்ட்டு ஒரு தனி உத்தரவு பிறப்பித்த பின்னரே, அவர் நேரில் ஆஜரானார்.

அந்தவகையில் சென்னை மாநகர போலீசார் மற்றும் திருவண்ணாமலை, திருவாரூர், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீசார் ஐகோர்ட்டு உத்தரவை கண்டுகொள்வது இல்லை என்று பெயர் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று முன்தினம் குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில், பல வழக்குகளுக்கு போலீஸ் தரப்பில் இருந்து பதில் வரவில்லை என்று நீதிபதி கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் வழக்குகளின் விசாரணையை தேவையில்லாமல் தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஏன் பதில் அளிப்பது இல்லை? என தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வருகிற 13-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன் முன்பு, மாநில தலைமை குற்றவியல் வக்கீல் என்.நடராஜன் நேற்று ஆஜராகி, வழக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும், டி.ஜி.பி. மற்றும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளனர். இனிமேல் இதுபோன்ற நிலை ஏற்படாது. எனவே, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால், போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com