

சென்னை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஆர்.அப்துல் கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
முஸ்லிம் லீக் மாநாட்டில் இஸ்லாமியர் நலன் கருதி 5 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, சந்தோசமா? என்ற கேள்வியையும் கேட்டுள்ளார். இஸ்லாமிய சமுதாயத்தை பொறுத்தவரையில், இந்த அறிவிப்புகளை யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற நோக்கில்தான் பார்க்கிறது.
முதல்-அமைச்சரின் அறிவிப்பில் மகிழ்ச்சி இல்லை. இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்க, அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கின்றது.
இஸ்லாமிய சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் உயர இடஒதுக்கீட்டை அதிகரிப்பதுதான் ஒரே தீர்வு. அதை விடுத்து உலமாக்களுக்கு கொடுக்கும் உதவித்தொகையின் மூலமாக இந்த ஜீவாதார கோரிக்கையை நீர்த்துப் போகச்செய்யமுடியாது. வரும் தேர்தலுக்கு முன் இடஒதுக்கீடு அதிகரிப்பு, நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை உள்ளிட்ட அறிவிப்புகளை தி.மு.க. அரசிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.