முக கவசம் அணியாத வடமாநில தொழிலாளர்களிடம் ரூ.56 ஆயிரம் அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் முககவசம் அணியாத வடமாநில தொழிலாளர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
முக கவசம் அணியாத வடமாநில தொழிலாளர்களிடம் ரூ.56 ஆயிரம் அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் தங்கி பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வடமாநிலத்தவர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுடன் வடமாநில தொழிலாளர்கள் பலர் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று காத்திருந்தனர். இதில் பலர் முககவசம் அணியாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அங்கு வந்த பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாத வடமாநில தொழிலாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.

அப்போது அங்கு முக கவசம் அணியாமல் இருந்த வடமாநில தொழிலாளர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் முக கவசம் முறையாக அணிய வேண்டும் என அங்கிருந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதைத்தொடர்ந்து ரெயில் நிலைய அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com