உழைப்பில்லாமல் உலகத்தில் எதையும் சாதிக்க முடியாது: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை எனில் எதிர்காலம் கடினமாகி விடும் என முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரியில் நேற்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சியில் ஊழையும் உப்பக்கம் காண்போம் என்ற தலைப்பில் மாணவ மாணவியர்கள் வாழ்வில் உயர்வை அடைய ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது:
மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களிடையே பகுத்தறிவு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனமகிழ்ச்சி தான் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பொருள் ஆகும். மனமகிழ்ச்சி இல்லாமல் இருப்பது என்பது மனநோய் ஆகும். மனசோர்வு இருந்தால் எந்த செயலும் செய்யமுடியாது. மன அளவில் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்க முடியும். தமிழர்களுக்கு என்று மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. குறிப்பாக கடல் கடந்து வணிகம் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 339 பில்லியன் டாலர். தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயர்வுக்கு காரணம் பெண்கள் தான்.
மனிதர்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே கல்வி கற்க தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவியர்களுக்கு உதவித்தொகை, தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை, அரசு பணி, காவல்துறை, மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் மற்றும் பணியில் சேர்வதற்கு அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசானது, மாணவ மாணவியர்களுக்காக பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்களாகிய நீங்கள் உங்களிடம் உள்ள திறமைகளை எண்ணி பார்க்க வேண்டும். தமிழ் மக்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர்கள் வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அப்பொழுது தான் தமிழ் வாழும். மேலும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை எனில் எதிர்காலம் கடினமாகி விடும்.
வாழ்க்கையை ரசிக்க வேண்டும். வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என சிந்திக்க வேண்டும். நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். கல்வி என்பது மாற்றம். கல்வியின் கொள்கையை பற்றி மாணவர்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் செய்கின்ற செயல்களில் ஆர்வமாக இருக்க வேண்டும். மேலும் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்ற மனிதர்களிடம் ஒத்துழைத்து செயல்படுவதை கற்க வேண்டும். வாழ்க்கையில் ஒத்துழைப்பு என்பது மிகப்பெரிய பண்பு. ஒத்துழைப்பு மற்றும் படைப்புதிறன் உள்ளவர்களாக மாற்றுவது தான் கல்வி கொள்கையின் நோக்கம். உழைப்பில்லாமல் எதையும் இந்த உலகத்தில் சாதிக்க முடியாது.
வாழ்க்கையில் மாணவர்களாகிய நீங்கள் என்னவாக உருவாக வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யுங்கள். மேலும் மனதில் தோன்றுவதை ஒவ்வொரு நாளும் ஒரு பக்கத்தில் எழுதி பார்க்க வேண்டும். இன்றைக்கே உங்களுடைய வாழ்க்கையை மாற்றிக் காட்டுங்கள். உங்களுக்காக பெரிய எதிர்காலம் உள்ளது. வாழ்க்கையில் இரண்டு நாட்கள் தான் முக்கியமான நாள். ஒன்று பிறந்த நாள், மற்றொன்று நாம் ஏன் பிறந்தோம் என்பதை உணர்ந்து கொள்ளும் நாள். வாழ்க்கையின் நோக்கத்தில் மாணவர்களாகிய நீங்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திடுவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவர் காமராஜ் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி மற்றும் அரசு துறைகள் சார்ந்த அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, காமராஜ் கல்லூரி முதல்வர் பானுமதி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






