

சென்னை
ஆயிரம் விளக்கு தெகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
இதை தொடர்ந்து கு.க. செல்வம் பா.ஜனதாவில் இணையலாம் என தகவல் வெளியானது , அதை அவர் உடனடியாக மறுத்தார். இந்நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய கு.க. செல்வம், பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்துக்கு நேராக சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறி விட்டதாக குற்றம்சாட்டினார். தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கினாலும் கவலை இல்லை என கூறினார்.
பாஜகவில் இணைந்து வீட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் கு.க. செல்வம் சென்றுவிட்டார். எனினும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி .துரைசாமி கு.க செல்வம் பாஜகவில் சேரவில்லை என கூறினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது திமுக சிறிய இடர்பாடுகளைத் தான் சந்தித்தது. வி.பி. துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்களால் திமுக-வுக்கு எந்த இடர்பாடும் இல்லை.
கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை; அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. நான் சட்டமன்றத்தில் பேசிய அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்றைக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது.
10 நாளில் கொரோனா போய்விடும் என்றார் முதல்வர் ஆனால் இதுவரை குறைந்தபாடில்லை என கூறினார்.