விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்

குழந்தையின் தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர்.
விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை பிறந்தது முதல் அறுவை சிகிச்சை நடைபெற்ற அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இர்பானின் செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் இர்பான் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- யூடியூபர் இர்பான் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. பிரசவம் நடைபெற்ற மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com