டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 1,729 பேருக்கு நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 1,729 பேருக்கு நோட்டீஸ்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 51 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்ப கொடுக்கும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

போதிய இடவசதி, அதிகம் விற்பனையாகும் கடைகளுக்கு கூடுதல் சிரமம், ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டினர். காலிபாட்டில்களை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும், தானியங்கி பாட்டில் சேகரிப்பு எந்திரங்களை நிறுவ வேண்டும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்தனர்.

கடையடைப்பு

இந்தநிலையில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்று ரூ.10 வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் டாஸ்மாக் போராட்டக்குழுவினருடன் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முதல் நாள் கடைகளை அடைத்ததால் ரூ.150 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற் பட்டதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

360 பேர் பணியிடை நீக்கம்

மேலும், நேற்று முன்தினம் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 960 பேருக்கு டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பியுள்ளது. இதில் 360 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்தார். நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் உள்புற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் நேற்று மதியம் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், டாஸ்மாக் கடையை திறக்காமல் போராட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி 1,729 மேற்பார்வையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

X