மின்துறை தொடர்பான சேவைகளுக்கு புகார் எண் அறிவிப்பு

'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தை 94987-94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்துறை தொடர்பான சேவைகளுக்கு புகார் எண் அறிவிப்பு
Published on: 

சென்னை,

தமிழகத்தில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் விபத்துகளில் சிக்குவதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளையும், புகார் எண்ணையும் வெளியிட்டுள்ளது

இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

டிரான்ஸ்பார்மர்கள் அருகே செல்ல வேண்டாம்

மழை மற்றும் பலத்த காற்று வீசும் காலங்களில், பொதுமக்கள் சாலையோரங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் (பில்லர் பாக்ஸ்), மின் கம்பிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றின் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால், அங்கு செல்லாமல் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அறுந்து விழுந்த கம்பிகளை தொடாதீர்

மின்கம்பிகள் ஏதேனும் அறுந்து விழுந்தால், பொதுமக்கள் யாரும் அதைத் தொடவோ அல்லது அதன் அருகில் செல்லவோ கூடாது. மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து அதை சரிசெய்யும் வரை, மற்றவர்கள் யாரும் அதைத் தொடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இடி, மின்னலின் போது உஷார்

இடி மற்றும் மின்னல் ஏற்படும் சமயங்களில், வீடுகளில் தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதன் பொருட்கள் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், வீட்டின் திறந்த ஜன்னல்கள் மற்றும் இரும்பு கிரில் கதவுகளின் அருகே நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

ஈரக் கைகளுடன் சுவிட்சுகளை தொடாதீர்

பொதுமக்கள் யாரும் ஈரமான கைகளுடன் மின் சுவிட்சுகளை இயக்கக் கூடாது. வீடுகளில் மின் சுவிட்சுகள் மற்றும் பிளக் பாயிண்ட்டுகள் இருக்கும் இடத்திற்கு அருகே குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.

மின்கசிவு தடுப்பு கருவி கட்டாயம்

மின் விபத்துகளை முற்றிலும் தவிர்க்க, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும். இது ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக கண்டறிந்து மின் வினியோகத்தை தானாகவே நிறுத்தி, பெரும் விபத்துகளை தடுக்கும்.

24 மணி நேர சேவை எண்

மழைக்காலங்களில் ஏற்படும் மின்தடை புகார்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது அவசர உதவிகள் பெற, மின்வாரியத்தின் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தை 94987-94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com