குறுஞ்செய்தி மூலம் நூதன மோசடி - பெண் ஊழியரிடம் ரூ.1.68 லட்சம் அபேஸ்!

முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
பெண் ஊழியரிடம் ரூ.1.68 லட்சம் அபேஸ்
Published on: 

சேலம்,

கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 800 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிசு தருவதாக குறுஞ்செய்தி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு, தங்கள் பகுதியில் உள்ள சிறந்த ஓட்டல் குறித்த தகவலைத் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் எனக் கூறி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதை நம்பிய அந்தப் பெண், குறிப்பிட்ட ஓட்டலின் பெயரைப் பதிலாக அனுப்பியுள்ளார்.

ரூ.380 அனுப்பி நம்பவைத்த மர்ம நபர்கள்

இதையடுத்து, அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு ரூ.380 அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதே செல்போன் எண்ணில் இருந்து முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய அந்தப் பெண், பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 800-ஐ அனுப்பியுள்ளார்.

செல்போன் எண் சுவிட்ச்-ஆப்

பணத்தை அனுப்பிய பிறகு, குறுஞ்செய்தி வந்த செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து அவர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com