

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் 110 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ந் தேதி எல்லைப் போராட்டத்தை நினைவு கூறும் நாள் தானே தவிர, தமிழ்நாடு தினம் அல்ல; மாறாக 1967-ம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18-ந் தேதி தான் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் கூறி இருப்பதை ஏற்க முடியாது. ஒரு மாநிலம் பிறந்த நாளைத் தான் அம்மாநில தினமாக கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாக கொண்டாட முடியாது.அதன்படி, தமிழ்நாட்டின் எல்லைப்பரப்பு உறுதி செய்யப்பட்ட நாளும், இன்றைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பைக் கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாளுமான நவம்பர் 1-ந் தேதி தான் தமிழ்நாடு தினம் ஆகும். இதை மாற்ற முடியாது.
எனவே, இன்றைய தமிழ்நாடு நிலப்பரப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியே தொடர்ந்து தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.