பஸ், மின்சார ரெயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம்

சென்னையில் 22-ந்தேதி முதல் ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ்கள், புறநகர் மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் பயணிக்கலாம்.
சென்னை,
சென்னையில் மாநகர பஸ்கள், புறநகர் மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 'கும்டா' என்னும் போக்குவரத்து குழுமம், தனியார் நிறுவனம் மூலம் புதிய மென்பொருளை தயாரித்தது. இதன் அடிப்படையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் வெளியில் செல்லும் போது எந்தெந்த பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்து, அதற்கான வழித்தடங்களை குறிப்பிட்டு கட்டணம் செலுத்தினால் கியூ.ஆர். குறியீட்டு டிக்கெட், மொபைல் போனில் கிடைக்கும்.
இந்த குறியீட்டை காட்டி, மாநகர பஸ்கள், புறநகர் மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் பயணிக்கலாம். இந்த புதிய செயலியின் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த செயலிக்கு 'சென்னை ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி வருகிற 22-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய வசதியை தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






