உடல் உறுப்பு தானம் பெற பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் 8,183 பேர் காத்திருப்பு


உடல் உறுப்பு தானம் பெற பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் 8,183 பேர் காத்திருப்பு
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 8,183 பேர் காத்திருக்கின்றனர்.

சென்னை

தேசிய அளவில் உடல் உறுப்பு தானம் அளிப்பதில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. உடல் உறுப்பு தானத்தை பொறுத்தவரையில், முந்தைய கால கட்டங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் குறைந்த அளவிலான மக்களே தானம் செய்து வந்தனர். இதனால் பொதுமக்களிடையே அரசு சார்பில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு உடல் உறுப்பு தானம் அளிப்பவரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உறுப்பு வேண்டி பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் தற்போதுள்ள முன்பதிவு பட்டியலின்படி உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரையில் 8,183 பேர் காத்திருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றால், உறுப்பு தானம் செய்ய அதிகம்பேர் முன்வர வேண்டும் என உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல, முதல்-அமைச்சர் உடல்நல காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் தேவைப்படுவோர், அரசிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தானமாக கிடைக்கும் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன.

தமிழகத்தில் என்னென்ன உறுப்புகளுக்காக பதிவு செய்துள்ளனர் என்ற விவரம் வருமாறு:-

சிறுநீரகம்-7,384, கல்லீரல்- 523, இதயம்-84, நுரையீரல்-52, சிறு குடல்-5, கை-26, கணையம்- 6, இதயம் மற்றும் நுரையீரல்-13, சிறுநீரகம் மற்றும் கல்லீரல்-49, சிறுநீரகம் மற்றும் கணையம்-40, கணையம், சிறுகுடல், வயிறு-1.

1 More update

Next Story