அரசு மருத்துவமனையில் உதவுவது போல் நடித்து நகை அபேஸ்... நர்சு கைது!

ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கைது
Published on: 

ராயபுரம்,

ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண்ணுக்கு உதவுவதுபோல் நடித்து சுமார் 2.25 பவுன் நகையை 'அபேஸ்' செய்த நர்சு கைதானார்.

நகையுடன் மாயம்

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 50). கடந்த ஜூன் 6-ந்தேதி கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு தெரிந்த மதுபாலா என்பவரின் அக்கா ஜோதி (32),உதவிக்கு யாருமில்லாத கவுசல்யாவுக்கு உதவி செய்து வந்துள்ளார்.

ஜூன் 8-ந்தேதி கவுசல்யாவுக்கு எக்கோ பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. அப்போது நகைகள் அணியக்கூடாது எனக்கூறி, அவரது தங்கச்சங்கிலி, மோதிரம். கம்மல் உள்ளிட்ட சுமார் 2.25 பவுன் நகைகளை ஜோதி கழற்றி வாங்கினார். பரிசோதனை முடிந்து திரும்பிய கவுசல்யா, ஜோதியையும் நகைகளையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

நர்சு கைது

இதுகுறித்து கேட்டபோது நகைகளை திருப்பித் தருவதாக கூறி ஜோதி காலம் கடத்தி, பின்னர் தரமுடியாது என மறுத்தார். இதுபற்றி கவுசல்யா அளித்த புகாரின்பேரில், ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பதுங்கியிருந்த ஜோதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 2.25 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. விசாரணையில், ஜோதி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிவது தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X