செவிலியர் தினம்: சென்னையில் கோரிக்கை பட்டை அணிந்து பணி செய்த தொகுப்பூதிய செவிலியர்கள்

தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளை சர்வதேச செவிலியர் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில், "செவிலியர்களைப் பராமரிப்பது பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் நேற்று கோரிக்கை பட்டையை அணிந்து கொண்டு சர்வதேச செவிலியர் தின நாளில் பணியை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது. அந்த கோரிக்கை பட்டையில், " தேர்தல் வாக்குறுதி 351-ஐ நிறைவேற்று, சம வேலைக்கு சம ஊதியம் உத்தரவை நிறைவேற்று, மகப்பேறு விடுப்பு ஊதியம் வழங்கிடு. வெளிப்படையான கலந்தாய்வு நடத்திடு." என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணி செய்த தொகுப்பூதிய செவிலியர்கள் கோரிக்கை பட்டைகளை அணிந்து இருந்தனர்.






