கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நர்சுகள் மீண்டும் போராட்டம்

சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்திய நர்சுகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைந்து வைக்கப்பட்டிருந்தனர்.
வண்டலூர்,
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று முன்தினம் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எம்.ஆர்.பி. நர்சுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 700-க்கும் மேற்பட்ட நர்சுகளை போலீசார் கைது செய்து மாநகர பஸ்சில் ஏற்றி நேற்று முன்தினம் இரவு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டனர். ஆத்திரமடைந்த நர்சுகள் கிளாம்பாக்கம் பஸ் நிலைய வளாகத்திற்குள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 700-க்கும் மேற்பட்ட நர்சுகளை போலீசார் நேற்று விடியற்காலை மீண்டும் கைது செய்து ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மண்டபத்தில் இருந்தபடியே நேற்று காலை நர்சுகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்ட குழுவின் முக்கிய நிர்வாகிகளை, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தை நர்சுகள் தொடர்ந்தனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 150-க்கும் மேற்பட்ட நர்சுகள் மண்டபத்தை விட்டு வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, ‘தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும், மீண்டும் வேலை கிடைக்காது என்றும் போலீசார் மிரட்டி வருகின்றனர். இங்கு எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை’ என தெரிவித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “நர்சுகளை பொறுத்தவரை அவர்களை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. இவர்கள் இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் பணியில் சேர்ந்தவர்கள் இல்லை. ஏற்கனவே 9 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு பணிநியமனம் வழங்குவது தொடர்பாக அரசாணை உள்ளது.
இந்த அரசுப் பொறுப்பேற்ற பின்னர் 3,783 நர்சுகள் பயன்பெற்றிருக்கிறார்கள். இன்னும் 8,322 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். பணி ஆணைகள் வழங்கப்படும்போதே காலிப்பணியிடங்கள் உருவாகும்பட்சத்தில் பணிநிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் இருந்தும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்று குற்றம் சொன்னால் பரவாயில்லை.
காலிப்பணியிடங்களே இல்லை என்கின்ற நிலையை இத்துறை உருவாக்கி வைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமை அல்ல. அதேபோல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைகளில் உள்ள விதிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது. இருப்பினும் போராடும் நர்சுகள் பேச வந்தாலும் அவர்களிடம் பேச தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நர்சுகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.






