பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் நர்சுகள் போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி முன்பு நர்சுகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நர்சுகளை கைது செய்தபோது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் நர்சுகள் போராட்டம்
Published on

சென்னை,

மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் (எம்.ஆர்.பி) தேர்ச்சி பெற்று கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து பெரும்பாலான நர்சுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நீண்ட நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையம் அருகேயும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வாயில் முன்பும் நேற்று ஏராளமான நர்சுகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து நர்சுகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோரிக்கை

நாங்கள் தேர்வாணையம் மூலமாக தேர்வு எழுதி பணிக்கு வந்துள்ளோம். பணியில் 2 ஆண்டுகள் முடிந்த பின்னர் தொகுப்பு ஊதியத்தில் இருந்து பணி நிரந்தரம் செய்வதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 7 ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யவில்லை. இது எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது. எங்கள் குடும்பங்களை பார்த்துகொள்ள போதுமான சம்பளம் இல்லை.

எம்.ஆர்.பி நர்சுகளுக்கு உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. எம்.ஆர்.பி தேர்வின் மூலமாக தான் வேலை என வந்த பிறகும், காலவரையற்ற தொகுப்பு ஊதிய செவிலியம் என்பதை அரசு தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைது

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் தலைமையிலான போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது நர்சுகள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரத்த குரலில் கோஷம் எழுப்பினர். இதையடுத்து பெண் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கைது செய்ய முயன்றனர்.

அப்போது போலீஸ்-நர்சுகள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனாலும் பெண் போலீஸ், நர்சுகளுடன் மல்லுக்கட்டி அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேன் மற்றும் பஸ்களில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட சுமார் 400 நர்சுகளும் அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com