பெரியகுளம் அருகே பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை; தமிழக அரசியலில் பரபரப்பு

பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை; தமிழக அரசியலில் பரபரப்பு
Published on

பெரியகுளம்,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுதேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் சில மாதங் களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அ.தி.மு.க. கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த குழு தான் வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இதற்கிடையே வருகிற 7-ந்தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழுவில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வருகிற 6-ந்தேதி (நாளைமறுநாள்) அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் தலைமை கழக டுவிட்டர் பக்கத்தில் இருந்து அது திடீரென அகற்றப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி 6-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வந்தார். அங்கு அவரை தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவரது வீட்டில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி பண்ணை வீட்டிற்கு சென்றார். அங்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களுடன், ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதையறிந்த செய்தியாளர்கள் நேற்று காலை முதலே பண்ணை வீட்டின் முன்பு கூடி இருந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் பங்கேற்ற நிர்வாகிகள் பண்ணை வீட்டை விட்டு வெளியே வரும்போது செய்தியாளர்கள் வழிமறித்து கருத்து கேட்டனர். அப்போது சிலர் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகவும், கட்சிக்கு பொதுச்செயலாளராகவும் வர வேண்டும் என்றனர். நேற்று இரவு வரை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து பண்ணை வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com