4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள் வாக்காளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள் என ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள் வாக்காளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
Published on

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வாக்காளர்களுக்கு கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் தலைமையின் கீழ் நடைபெற்ற அ.தி.மு.க. அரசுகள், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றவும் உருவாக்கி செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். அந்த இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியில் சிறிதளவும் பிறழாமல் மக்களுக்குத் தொண்டு செய்வது ஒன்றே தலையாய லட்சியமாக கொண்டு நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சிறப்புடன் பணியாற்றிட, இந்த இடைத் தேர்தலில் உங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளிப்பது மிகவும் அவசியமானது.

தி.மு.க. ஆட்சியில் நிலவிய பலமணி நேர மின்வெட்டால் மக்கள் பட்ட அவதிகளை எண்ணிப் பாருங்கள். அதிலும் குறிப்பாக, கடுமையான கோடை காலத்திலும் தி.மு.க. ஆட்சியில் நிலவிய மின்வெட்டால் தமிழ்நாடே அல்லல்பட்டதை மறக்க முடியுமா? ஊருக்கு ஊர் கட்டப் பஞ்சாயத்து, ரவுடிகள் ராஜ்ஜியம், அவரவர் சொத்து அவரவருக்குச் சொந்தம் என்ற சட்டத்தின் உத்தரவாதம் தகர்ந்துபோய் தமிழ் நாடெங்கும் நிலவிய நில அபகரிப்பு, அதற்கு துணைபோன தி.மு.க. முக்கியப் புள்ளிகளின் அராஜகம் போன்றவை எல்லோருடைய மனதிலும் பசுமையாக இருக்கின்றன.

பிரியாணி கடையில் அடிதடி

எங்கு பார்த்தாலும் ஊழல், முறைகேடு, சட்டம்ஒழுங்கு சீர்குலைவு, குடும்ப அரசியலின் கோரத்தாண்டவம் என்று தி.மு.க. நடத்திய கொடுங்கோல் அரசை தூக்கி எறிந்துவிட்டு, ஜெயலலிதாவின் அன்புக் கரங்களில் ஆட்சியை ஒப்படைத்தீர்கள். வன்முறையும், அராஜகமும் தி.மு.க.வுடன் ஒட்டிப் பிறந்த பிறவி குணங்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் அந்தக் கட்சியினரின் அடாவடிகளும், குற்றச் செயல்களும், சட்டத்தை மீறும் போக்கும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதை செய்திகளில் பார்க்க முடிகிறது.

பிரியாணி கடையில் அடிதடி, மகளிர் அழகு நிலையத்தில் அராஜகம் என்று தி.மு.க.வினர் தங்கள் சுயரூபத்தைக் காட்டி வருகின்றனர். இத்தகைய மனநிலையில் வாழ்பவர்கள் சிறிதளவு வெற்றியைச் சுவைத்தாலும், அதனால் சமூகத்திற்கு ஏற்படும் கேடுகளை யாரேனும் மறுக்க முடியுமா? இவர்கள் தலையெடுத்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு, வாக்காளர்களாகிய உங்களுக்கு இருக்கிறது.

அமைதிப் பூங்கா

ஜெயலலிதாவின் பொற்கால அரசு தமிழகத்தை அமைதிப் பூங்காவாய் மாற்றியது. விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி, கல்வி உபகரணங்கள், வண்ணச் சீருடை, கறவை மாடு, ஆடுகள் என்று எண்ணிலடங்கா உதவிகளை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்து, எல்லோரது வாழ்விலும் வசந்தத்தை வீசச்செய்து, மக்களை தன் உயிரினும் மேலாக நேசித்து மகத்தான ஆட்சியை ஜெயலலிதா நடத்தினார்.

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியே தொடரட்டும் என்று நீங்கள் அளித்த வெற்றிக்கு உண்மையுள்ள அரசாக நடைபெறும் அ.தி.மு.க. அரசு இன்னும் நூறாண்டு கடந்தும், தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் என்றும், கழகம் ஆயிரம் காலத்துப் பயிர்; இது என்றென்றும் ஆலமரமாய் நிலைத்து நிற்கும், மக்களுக்குத் தொண்டாற்றும் என்றும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சூளுரைத்தார்.

அவர் கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்ற ஒரே கொள்கை, குறிக்கோளோடு பணியாற்றிவரும் நாங்கள், அவரின் சொற்களை சிரமேற்கொண்டு பணியாற்றி வருகிறோம். மக்கள்நலப் பணிகளை செயல்படுத்துவதில் எவ்வித சுணக்கமும் இன்றி விரைவாகவும், தேக்கமின்றியும், உடனுக்குடனும் முடிவுகளை எடுத்து நல்லாட்சி நடத்தி வருகிறோம்.

இரட்டை இலைக்கு வாக்கு

அத்திக்கடவு-அவினாசி நீர்ப்பாசனத் திட்டம்; எதிர்காலத் தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை நிறைவு செய்ய காவிரி-கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டம்; சுற்றுச் சூழலை பாதுகாத்திட பிளாஸ்டிக் ஒழிப்பு; ஏழை எளியோர் நலன் காக்க பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்; வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கு உதவிட, குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் என்று, எண்ணற்ற திட்டங்களை மக்கள் நலனுக்காக தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் கொள்கை முழக்கம் தான் எங்கள் தாரக மந்திரம். அவரின் உண்மைத் தொண்டர்களாக, அவர் காட்டிய வழியில் மக்களுக்காகத் தொண்டாற்றும் தூய இயக்கமாக அ.தி.மு.க.வும், மக்கள் பணிகளை சிறப்புடன் செயல்படுத்தும் மாநில அரசு என்ற நற்பெயர் பெற்ற அரசாக தமிழ்நாடு அரசும் எந்நாளும் விளங்கும்.

ஜெயலலிதாவின் கனவு நிறைவேறவும்; உங்களின் உண்மைச் சேவகர்களாகிய எங்களது நற்பணிகள் தொடரவும்; தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழவும்; ஜெயலலிதா அமைத்த நல்லாட்சி தொடரவும், 19-ந் தேதி நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அ.தி.மு.க. வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி உங்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com