பிரேமலதா கோரிக்கையை நிராகரிக்க சொன்ன ஓ.பன்னீர்செல்வம் - சட்டசபையில் சிரிப்பலை

சட்டசபையில் தண்ணீர் பாட்டில் வைப்பது தொடர்பான விவாதத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் உட்பட அனைவரும் சிரித்தனர்.
பிரேமலதா கோரிக்கையை நிராகரிக்க சொன்ன ஓ.பன்னீர்செல்வம் - சட்டசபையில் சிரிப்பலை
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதத்தில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (விருத்தாசலம் தொகுதி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

பிரேமலதா:- கவர்னரின் உரை ஆளுங்கட்சியின் உரையாகவே இருந்தது. அவர் 37 நிமிடங்கள் பேசினார். தமிழை உச்சரித்ததில் 37 தவறுகள் இருந்தது. அது வேதனை ஆனது.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்:- கவர்னர் உரையின் தமிழ் உச்சரிப்பு பற்றி உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். வேறு மாநிலத்தை சேர்ந்த ஒரு கவர்னர் அரசு சார்பில் தனது உரையை படிக்க வந்தார். அவர் நமது தலைவர்களின் பெயர்களை உச்சரித்ததற்கே பாராட்ட வேண்டும். யார் பெயரையும் விடாமல் படிக்க வேண்டும் என்று அவர் காட்டிய ஆர்வத்தை பார்க்க வேண்டும். தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகவும் அக்கறையாக இருக்கிறார். எனவே, மேற்கொண்டு விமர்சனம் செய்ய வேண்டாம்.

பிரேமலதா:- நான் சட்டசபைக்கு வந்த நாளில் இருந்து பார்க்கிறேன். அவை பணியாளர்கள், எல்லா உறுப்பினர்களுக்கும் டம்ளரில் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கும் நமக்கே இது கஷ்டமாக இருக்கிறது. முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை. உறுப்பினர்கள் ஒவ்வொருவர் இருக்கையிலும் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் வைக்கலாம். இதனால், அரசுக்கு பெரிய செலவும் ஏற்படாது.

உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் (தி.மு.க.):- அண்ணியார் இங்கே நல்ல கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். ஆனால், அது ஏற்புடையது அல்ல. கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை கொண்டு எறிய வாய்ப்பு இருக்கிறது.

(ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு பேசியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது)

பிரேமலதா:- தண்ணீர் பாட்டிலைத்தான் வீச வேண்டும் என்று இல்லை. டம்ளரை கூட வீசியடிக்கலாம்.

உறுப்பினர் தங்கம் தென்னரசு (தி.மு.க.):- தண்ணீர் பாட்டிலை எறிவதற்கான வாய்ப்பு இருப்பதாக அண்ணன் ஓ.பி.எஸ். கூறினார். ஒரு வேளை அவரது தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக அவர் இங்கே குறிப்பிடுகிறாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

(இதனால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. முதல்-அமைச்சர் விஜய் உட்பட அனைவரும் சிரித்தனர்.)

பிரேமலதா:- தண்ணீர் என்றாலே இப்போது பிரச்சினைதான். அது காவிரி தண்ணீர் என்றாலும், டாஸ்மாக் தண்ணீர் (மது) என்றாலும் பிரச்சினைதான். காவிரி, மேகதாது விஷயத்தில் யாரும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக முதல்-மந்திரிகள் 3 பேருமே புதியவர்கள். எனவே, நட்பு ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம். இல்லை என்றால், சட்ட ரீதியாக காணலாம். என்னை வெற்றி பெற வைத்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பீங்கான் தொழிற்சாலை மற்றும் கல்லூரி அங்குமட்டும்தான் உள்ளது. நலிவுற்ற அதை மேம்படுத்த வேண்டும். குடிதண்ணீரில் மாசு உள்ளதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கூட்டுக்குடிநீர் திட்டம் வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com