தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு


தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு
x
தினத்தந்தி 30 Oct 2025 2:53 PM IST (Updated: 30 Oct 2025 5:13 PM IST)
t-max-icont-min-icon

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து வி.கே. சசிகலா வழிபாடு செய்தார்.

சென்னை,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் குரலெழுப்பி பரபரப்பை ஏற்​படுத்​தி​னார். இதனையடுத்து, செங்கோட்டையனை கட்சிப் பதவி​களில் இருந்து நீக்கி எடப்பாடி பழனி​சாமி உத்தரவிட்டார். அதிமுக ஒன்றிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வம் - செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் - செங்கோட்டையன் திறந்த வேனில் நின்றபடி சென்றனர். அப்போது இருவருக்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பசும்பொன்னின் நெடுங்குளம் அபிராமம் பகுதியில் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர்.

இந்தநிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் தரையில் அமர்ந்து வி.கே.சசிகலா வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து பசும்பொன் தேவர் நினைவிடம் வந்த சசிகலாவை, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்தித்தனர். முன்னதாக தினகரனுடன் சந்தித்த நிலையில், சசிகலாவுடனும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story