இ-பதிவு அனுமதியுடன் இயங்கியபோதும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவு மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இ-பதிவு அனுமதியுடன் இயங்கியபோதும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் உடனே ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இ-பதிவு அனுமதியுடன் இயங்கியபோதும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவு மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Published on

சென்னை,

காவல் துறை என்பது நாணயத்தின் இருபக்கம் போன்றது. சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சம் என்ற பக்கம்தான் தெரிய வேண்டும் என்பார் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

10-ந் தேதி முதல் முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அந்தப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வாகனங்களில் சென்று வர இ-பதிவு முறை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இ-பதிவு முறையைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பத் தரக்கோரி வாகன ஓட்டிகள் 2-வது நாளாக திருவொற்றியூரில் சாலை மறியல் செய்து வருவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது.

உதிரி பாகங்கள்காணாமல் போகும்

அவர்கள் மறியல் செய்வதற்கான மற்றொரு முக்கியமான காரணம், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதுதான்.

அவர்களுடைய கோரிக்கையில் நிச்சயம் நியாயம் உள்ளது. ஏற்கனவே, முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள், தங்கள் வாகனங்களில் உள்ள விலை உயர்ந்த உதிரி பாகங்கள் சமூக விரோதிகளால் களவாடப்படுமேயானால், அந்த உதிரி பாகங்களை புதிதாக வாங்க பல ஆயிரம் ரூபாய் மேலும் அவர்கள் செலவழிக்க வேண்டி வரும்.

திரும்ப ஒப்படைக்க வேண்டும்

இதன்மூலம், அவர்கள் மேலும் கடனாளியாக ஆகக்கூடிய சூழ்நிலை உருவாகும். காவல் துறையினருக்கும் தற்போதுள்ள வேலைப் பளுவில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சேதாரம் ஏதுமில்லாமல் இருக்கின்றனவா? என்பதை 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான செயல்.

எனவே, வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து, "சட்டப்படி நடப்பவருக்கு நண்பர்" என்பதை நிலைநாட்டும் வகையில், சட்டத்திற்குட்பட்டு தமிழ்நாட்டில் இ-பதிவு முறையில், அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும், அதன் உரிமைதாரர்களிடம் உடனடியாக திரும்ப ஒப்படைக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டுமாய் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com