

சென்னை,
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு முறை பயணமாக கடந்த 7-ந் தேதி அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் பாராட்டு விழாவில் பங்கேற்ற அவருக்கு தங்க தமிழ்மகன் விருது வழங்கப்பட்டது. சிகாகோ இந்திய தூதரகத்தில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதிக்கு ரூ.720 கோடி முதலீடுகள் திரட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வாஷிங்டனில் நடந்த உலக வங்கியில் தமிழக மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதியுதவி குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கைக்கு தன் சொந்த பங்காக ரூ.7 லட்சம் நிதியை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
அதன்பின்னர், நியூயார்க் தமிழ்சங்கம் சார்பில் நடந்த விழாவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அமெரிக்க பயணத்தில் அவருக்கு 6 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் 10 நாள் அமெரிக்க பயணம் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, விமானம் மூலம் புறப்பட்ட அவர், இரவு 8.30 மணியளவில் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறும் போது, அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்காக உலக வங்கி ரூ.5,000 கோடி நிதி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.