‘ஓ.பன்னீர்செல்வம் மீதான நன்மதிப்பு உயர்கிறது’ - திருமாவளவன்

ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.
‘ஓ.பன்னீர்செல்வம் மீதான நன்மதிப்பு உயர்கிறது’ - திருமாவளவன்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜய்யின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவருக்கு சால்வை அணிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் மீதான நன்மதிப்பு உயர்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-

“பா.ஜ.க. போன்ற கட்சிகளில் சேராமல் மீண்டும் ஒரு திராவிட பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது ஓ.பன்னீர்செல்வம் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது. பா.ஜ.க. சொல்படி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் அவர் மீது இருந்தன.

ஆனால் இன்று அவர் எடுத்திருக்கும் முடிவு, அவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழி வந்தவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com