கூவம் நதிக்கரையோரம் உள்ள வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்புஅதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

திருவேற்காட்டில் கூவம் நதிக்கரையோரம் உள்ள வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூவம் நதிக்கரையோரம் உள்ள வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்புஅதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
Published on

திருவேற்காடு,

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த வீடுகள் இருப்பதாகவும் கூறி அவற்றை கணக்கெடுக்கும் பணிக்காக நேற்று பூந்தமல்லி தாசில்தார் மாலினி தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகைவிட்டு, உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கூவம் நதிக்கரையையொட்டி மேடான பகுதியில் எங்களது வீடுகள் இருக்கிறது. எனவே இந்த குடியிருப்புகளை அகற்றக்கூடாது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். ஆனால் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்காக அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். பல தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். இதுவரை எந்தவித வெள்ள பாதிப்பும் ஏற்படவில்லை. வெள்ள பாதிப்பின்போது அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளையும் நாங்கள் பெற்றதில்லை. இங்கு உள்ள பூர்வீக குடியிருப்புகளை எடுப்பதற்கு அதிகாரிகள் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டி வருகின்றனர்? என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறியதுடன், அதிகாரிகளை மடக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்போதும் அதிகாரிகளை உள்ளே விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை கணக்கெடுக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com