பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அதனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு
Published on

விழுப்புரம்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் சாலாமேட்டில் அரசு புறம்போக்கு இடத்தில் 1.85 ஹெக்டேர் பரப்பளவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகத்தினால் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை எங்கள் முன்னோர்கள் முதற்கொண்டு தலைமுறை, தலைமுறையாக தற்போது வரை நாங்கள் அனைவரும் வணங்கும் அங்காளம்மன் கோவிலாகவும், இந்த அங்காளம்மனை நாள்தோறும் குலதெய்வமாகவே வழிபட்டு வருகிறோம். ஆண்டுதோறும் மயானக்கொள்ளை திருவிழா, பொங்கல் திருவிழா, மாடு விரட்டும் திருவிழா ஆகியவை இங்குதான் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

வேறு இடத்திற்கு மாற்றக்கோரி...

இந்த இடம் வழியாக விவசாய பயன்பாட்டுக்கு செல்லும் ஏரி பாசன வாய்க்கால் உள்ளது. விவசாய பயன்பாட்டுக்கு செல்லும் முக்கிய வண்டிப்பாதையாகவும் பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு செல்வதற்கு முக்கிய சாலையாகவும் இந்த இடத்தை பயன்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த இடத்தை வெறும் மயானம் என்று மட்டுமே அரசு நினைத்து போதிய இடம் இருப்பதாக கருதி அந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு தேர்வு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டம் இங்கு அமையப்பெற்றால் கோவில், வாய்க்கால், பாதை, களம், மயானம் ஆகிய வகைப்பாட்டிற்கு போதிய இடமில்லாமல் போகும். எனவே இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com