ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம்: தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது

ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பெண்கள் பாதிரியார் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம்: தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29), பாதிரியார். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பணியாற்றி உள்ளார். இந்தநிலையில் சில இளம்பெண்களுடன் இவர் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தல், வாட்ஸ்அப் வீடியோ காலில் பாதிரியார் நிர்வாணமாக பேசுதல், ஆபாச சாட்டிங், இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் என பரவி முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.

இந்த பாதிரியார் ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் ஆலயங்களுக்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியதாக தெரிகிறது.

நர்சிங் மாணவி புகார்

இதற்கிடையே பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தன்னை பாலியல் ரீதியாக சமூக வலைத்தளம் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பது, மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பெனடிக்ட் ஆன்டோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தலைமறைவு

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ போலீசுக்கு பயந்து தலைமறைவானார். அவரை 2 தனிப்படை போலீசார் தமிழகம், பெங்களூரு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் தேடினர்.

இந்தநிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பினார். அவர் கேரளாவுக்கு சென்று தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

கைது

போலீசாரிடம் சிக்கி விடாமல் இருக்க தன்னுடைய இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இறுதியில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் வந்தது.

உடனே நள்ளிரவில் அங்கு விரைந்த போலீசார் பெனடிக்ட் ஆன்டோவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கிடுக்கிப்பிடி கேள்விக்குமவுனம்

பின்னர் நாகாகோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

முதலில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ போலீசாரிடம் எந்தவொரு தகவலையும் அளிக்காமல் மழுப்பலாகவே பதிலளித்தார். இதனால் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில், நான் எந்த பெண்ணையும் பாலியல் ரீதியாக மிரட்டவில்லை என தெரிவித்தார். மேலும் போலீசார் அவரிடம், செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட இளம்பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் அவர் நிர்வாணமாக இருக்கும் படம் போன்றவற்றை காட்டி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு மவுனமாகவும், ஒரு சில கேள்விக்கு மட்டும் அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடாந்து நேற்று மதியம் அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் 4 பெண்கள் புகார்

இதற்கிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவால் மிரட்டப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம், அவர்களுடைய பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மேலும் 4 பெண்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தரங்க வீடியோக்கள் வெளியானது எப்படி?

பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ செல்போன் மூலம் பெண்களுடன் பழகும் அனைத்து விவரங்களும் செல்போனிலேயே பதிவாகும் வகையில் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்திருந்தார். இதுதான் தற்போது அவரை சிக்க வைத்துள்ளது. அவருடைய செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்கள் தான் ஒவ்வொன்றாக சமூகவலைதளத்தில் பரவியது. பாதிரியாரின் லீலை பற்றி அறிந்தவர் தான் இதனை பரப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ஏற்கனவே பாதிரியாரின் தந்தையை தாக்கியதாக ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு தான் பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

இந்தநிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவிடம் இருந்து செல்போன், லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். செல்போனில்தான் பாதிரியாரின் அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரது லேப்டாப்பையும் ஆய்வு செய்தனர். பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது அவருடைய லீலை பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com