

சென்னை,
பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கான இடர்பாடுகள் களையப்பட்டுள்ளதால், விவசாயிகள் பயன்பெற அமைச்சர் ர.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2026-2027 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்வதில் குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கிருந்த இடர்பாடுகள் களையப்பட்டதை தொடர்ந்து குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற வேளாண்மை நலத்துறை அமைச்சர் ர.வினோத் வேண்டுகோள்.
2026-2027 ஆம் ஆண்டில், சம்பா/ தாளடி/ பிசானம் பருவத்தில் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையினை ஏற்று. விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட முயற்சியால் சம்பா/தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி 01.12.2026 வரை நீட்டிக்கப்பட்டது.
எனினும், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் 2026-2027 சம்பா பருவம் முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் நில உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள விவசாயி அடையாள எண்ணும், குத்தகை விவசாயிகள் பதிவு செய்து கொள்ள நில உரிமைதாரர்களிடமிருந்து ஆதார் அடிப்படையிலான ஒருமுறை கடவுச்சொல் (OTP) ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டதால், பேரூராட்சி, நகராட்சி, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களும் மற்றும் தனியார் மற்றும் கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகளாலும், இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்வதில் இடர்பாடுகள் இருந்தன.
இதை தொடர்ந்து. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க வேளாண்மைத் துறையின் உயர் அலுவலர்கள் அடங்கிய குழு, மத்திய அரசை நேரில் சந்தித்து, தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப இடர்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தது. மேலும், குத்தகை விவசாயிகள், மலைப்பகுதி மற்றும் நகர்புற விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறும் வகையில், விவசாயி அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான ஒருமுறை கடவுச்சொல் OTP ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகளிலிருந்து உரிய விலக்கு அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க, தகுதியுள்ள குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், மத்திய அரசால் 2026-2027 ஆம் ஆண்டிற்கு விவசாயி அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான ஒருமுறை கடவுச்சொல் OTP ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகளிலிருந்து உரிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து பயனடையுமாறு மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.