

பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேப்பிலைஅள்ளி, பனைகுளம் ஊராட்சிக்குட்பட்ட 5 கிராமங்களில் வீட்டு மின்இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.18,700 வரை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்க பாப்பாரப்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் ஆவேசம் அடைந்து மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த இளநிலை பொறியாளர் செந்தில்குமாரிடம் கூடுதல் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டது குறித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து எழுத்துப்பூர்வ புகார் தெரிவித்தால் மேல் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் புகார் மனு எழுதி கொடுத்ததுடன், பூட்டிய அலுவலகத்தை திறந்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.