

தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, வராகி, முருகர், விநாயகர், கருவூரார், நடராஜர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலின் 8 திசைகளில் ஆகம விதிகளின்படி இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் உள்ளிட்ட அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகள் உள்ளன. இதில் இந்திரன், எமன், நிருதி, குபேரன் ஆகிய நான்கு சன்னதிகளில் சிலை இன்றி, பூட்டிய நிலையில் உள்ளன. மீதமுள்ள நான்கு சன்னதிகளில் சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்துள்ளன.
எனவே பூஜைகள் தடையின்றி நடக்க ஏதுவாக அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகளை முறையாக பராமரிக்க வேண்டும், சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகள் நிறுவ அனுமதிக்க மத்திய தொல்லியல்துறை அனுமதி தர வேண்டும் என தஞ்சையை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'தஞ்சை அறநிலையத்துறை இணை கமிஷனர், மத்திய தொல்லியல்துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆகியோர் இணைந்து கோவிலில் ஆய்வு செய்து வருகிற 28-ந் தேதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி, உதவிகண்காணிப்பாளர் வெற்றிச்செல்வி, முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா, இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை கமிஷனர் ஞானசேகர், உதவி கமிஷனர் கார்த்திகேயன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.