

கீரனூர்,
பழனி அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனி அருகே மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மானூர் பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக நேற்று தகவல் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி பள்ளி திறக்கப்பட்டது. காலையில் பணிக்கு வந்த சத்துணவு ஊழியர்கள், மாணவர்களுக்கு குடிநீருக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் தொட்டியை பார்த்தபோது, அதில் மனிதக்கழிவு இருந்ததாகவும், இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரியப்படுத்தி அதை உடனடியாக அப்புறப்படுத்தி சுத்தம் செய்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் பிளாஸ்டிக் தொட்டி வைத்து அதில் தினமும் குடிநீர் நிரப்பி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி காலாண்டு தேர்வு முடிந்து கடந்த 5-ந்தேதி பள்ளி திறக்கப்பட்டது. காலையில் வந்த பணியாளர்கள் தொட்டியில் குடிநீர் நிரப்புவதற்காக பார்த்தனர். அப்போது, அதில் மனிதக்கழிவு இருந்தது.
பின்பு அந்த தொட்டியை சுத்தம் செய்து அப்புறப்படுத்தி தனியாக வைத்து விட்டோம். இதுபற்றி கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினோம். அந்த தொட்டியில் தண்ணீர் எதுவும் இல்லாததால் யாரும் குடித்திருக்க வாய்ப்பில்லை. சுகாதார அலுவலர்களும் வந்து பார்வையிட்டு சென்றனர் என்றார்.
மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, பள்ளியில் குடிநீர், சுகாதாரம் என போதிய அடிப்படை வசதிகள் இல்லை. பள்ளிக்கு அருகில் திறந்த வெளிகழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் பள்ளி நிர்வாகம் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கிறது. எனினும் பள்ளியில் குடிநீர், கழிப்பிடம், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை பொருத்த வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பழனி அருகே மானூரில் அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார் எழுந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
காலை உணவுக்கு தண்ணீரை பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகித்த பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்று ஆய்வு செய்த அதிகாரிகள் மாணவர்களுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டனர்.